நடமாடும் நகைக்கடையை அலேக்கா தூக்கிய வருமான வரித்துறை..! ரூ.1.5 கோடியை அள்ளிக் கொடுத்த ஹரி..!

நடமாடும் நகைக்கடையை அலேக்கா தூக்கிய வருமான வரித்துறை..! ரூ.1.5 கோடியை அள்ளிக் கொடுத்த ஹரி..!

News videos

கழுத்து நிறைய நகைகளுடன் நடமாடும் நகைகடையாக வலம் வந்த பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடாரை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து வருமான வரித்துறையினர் கொத்தாக தூக்கிச்சென்றனர்.கழுத்திலும், கைகளிலும் கொத்து கொத்தாக நகைகள் அணிந்து நகை கடை போல வலம் வந்தவர் பனங்காட்டு படைகட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார்..!

அந்தக் கட்சியின் ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஹரி நாடார் , சென்னையில் இருந்து தேர்தல் பிரசாரத்துக்கு ஆலங்குளம் செல்வதற்கு. விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து காரில் ஆலங்குளம் செல்ல திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகின்றது.அவரது கழுத்தில் கிடக்கும் கிலோ கணக்கிலான நகைகள் ஒரிஜினலா, இல்லை கவரிங்கா என அவரை பார்த்து பலரும் விழிகளை உயர்த்துவதுண்டு..! இதே சந்தேகம் விமான நிலைய பாதுகாப்பு படையினருக்கும் ஏற்பட்டுள்ளது.

கடந்த 28 ந்தேதி காலையில் ஹரி நாடார் சென்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளார். அவரிடம் விசாரித்த அதிகாரிகளிடம், நகைகள் அனைத்தும் 916 ஒரிஜினல் தங்கம் என்று விளக்கம் அளித்துள்ளார் ஹரி நாடார்.பின்னர் விமானத்தின் புறப்பாடு நேரம் நெருங்கியதால் அவரை அனுப்பி வைத்ததோடு, திருவனந்தபுரம் வருமானவரித்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து காலை 11 மணிக்கு திருவனந்தபுரத்தில் இறங்கியதும், ஹரி நாடாரை, சுற்றிவளைத்த வருமானவரித்துறையினர் அவரை அப்படியே கொத்தாக தூக்கி காரில் ஏற்றிச்சென்றனர்.அவர்கழுத்திலும், கையிலும் அணிந்திருந்த மொத்த நகைகளையும் கழற்றி 3 கட்டமாக பரிசோதிக்கப்பட்டது. ஆய்வின் முடிவில் அவை அனைத்தும் ஒரிஜினல் என்பது தெரியவந்தது. அவர் அணிந்திருந்தது 3 கிலோ 450 கிராம் எடை கொண்ட நகைகள் என்றும் அவை அனைத்தும் சென்னை ஜி.ஆர்.டி, மற்றும் பீமா ஜூவல்லர்ஸில் வாங்கப்பட்டதாக பில்களும் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நகைகளை வாங்க வருமானம் எப்படி வந்தது ? என கேள்வி எழுப்பியுள்ளனர். அவர் தான் சினிமா மற்றும் தொழில் அதிபர்களுக்கு பைனான்ஸ் கொடுக்கும் தொழில் செய்வதாக விளக்கம் அளித்துள்ளார்.இந்த ஆண்டுக்கு இதுவரை வரி செலுத்தாது ஏன் என கேட்டு அழுத்தம் கொடுத்துள்ளனர். வரி செலுத்துவதற்கு மார்ச் மாதம் இறுதிவரை நேரம் இருப்பதாக கூறி ஹரி நாடார் சமாளித்த நிலையில், வரி செலுத்தினால் நடவடிக்கை ஏதுமின்றி விடுவிப்பதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தனது சென்னை அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு கணக்கு விவரங்களை சமர்பித்த ஹரி நாடார், மொத்தம் 1 கோடியே 52 லட்சம் ரூபாயை வரியாக முன் கூட்டியே கட்டுவதாக ஒப்புக் கொண்டார்.அதன்படி வருமான வரித்துறையின் பெயரில் ஒரு கோடியே 52 லட்சத்துக்கான வரைவோலை வழங்கினார்.இதையடுத்து ஹரி நாடாரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள் அனைத்தும் அவரிடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

29 ந்தேதி இரவு ஹரி நாடாரை வருமானவரித்துறையினர் விடுவித்து அனுப்பி வைத்தனர். மீண்டும் கழுத்து நிறைய நகைகளோடு நடமாடும் நகை கடையாக வெளியேவந்தார்.அதிக நகை அணிந்து அனைவரையும் கவர்ந்திழுக்க வேண்டும் என்ற ஹரி நாடாரின் ராஜதந்திரம், அவரை வருமான வரித்துறையினர் கவர்ந்து செல்ல காரணமானது தான் எதிர்பார்க்காத டுவிஸ்ட்..!